தேசிய மர நடுகை மாதத்தினை முன்னிட்டும் நிலைபேறான அபிவிருத்தி இலக்காகிய சூழலியல் பாதுகாப்பினை முன்னிட்டும் முன்னெடுக்கப்பட்ட மர நடுகை மாத நிகழ்வுகளின் பதிவுகள்
*********************************************************************
உலகம் அழியப் போகிறது என்று தெரிந்தாலும் உங்கள் கையில் ஒரு மரம் இருந்தால் அதை நட்டிவிடுங்கள் என ஒரு நபிமொழி சொல்கிறது. ஒரு மரம் மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் எத்தனையோ விடயங்களைக் கொடுக்கிறது.சுவாசிக்க காற்று,நிழல்,கனி,விறகு என மரம் தன்னையே அர்ப்பணிக்கிறது. மரம் எப்போதும் கொடுக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு மரத்தை நடுவதும் தர்மமாக ஆகிறது.நிலையான தர்மம் அது.
நாம் நடும் ஒரு மரம் வளர்ந்து அதிலிருந்து ஒரு பறவையோ பிராணியோ சாப்பிட்டாலும் அதன் நன்மை நட்டவனுக்குக் கிடைக்கிறது. மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதால் அவற்றால் கிடைத்து வந்த பயன்கள் மறைந்து எதிர்மாறான விளைவு ஏற்படும் என்பதை மறந்து, சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, விமான நிலையங்கள், சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டும் வருகின்றன.
இதனால் பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு போன்றவை அதிகரித்துள்ளது.மரங்களைப் போன்று காடுகளை வளர்க்க முடியாது. காடுகளானது மரங்கள் மட்டும் அடங்கியவையல்ல. அவை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டு உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டவை. காடுகளின் இயல்பான போக்கினை மனிதனால் கொண்டுவர முடியாது. அதுவே முன்பு போல் மரங்கள் அடர்ந்திருந்தால் அவற்றின் வேர்கள் மண்ணை இறுகப்பற்றி நிலச்சரிவைத் தடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நன்மை கொடுக்கும் மரங்கள் காடுகளை அழிவில் இருந்து பாதுகாப்பது என் கடப்பாடாகும்.
எனவே ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்க்க முயற்சிக்க வேண்டும். இடவசதி இல்லாதவர்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள மைதானங்கள், பூங்காக்களில் வளர்க்க முயற்சிக்கலாம். குடியிருப்பு வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என பல்வேறு இடங்களில் இதற்கான முயற்சிகளை அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளலாம். மரம் வளர்க்க முயற்சிப்பவர்களுக்கு உரிய உதவிபுரிய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயமாக பாதுகாக்க முடியும்.
மரம் வளர்ப்போம்… மனிதம் வளர்ப்போம்