சுவர்ணபுரவர தேசிய விருது – 2024

⭐️மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடு முழுவதுமுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட மாகாண மற்றும் தேசிய செயற்றிறன் மதிப்பீட்டினை (PERFECT 2.0) அடிப்படையாகக்கொண்டு 25.07.2024 ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மாண்புமிகு பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் 2024 ஆம் ஆண்டுக்கான சுவர்ணபுரவர தேசிய விருது வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா நகர சபையானது 632.50 புள்ளிகளைப் பெற்று Tier 2 தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளி விருதினை சுவீகரித்துக்கொண்டது.
⭐️ நாடு முழுவதுமுள்ள 41 நகரசபைகளிற்கிடையில் கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் எமது சபையானது தேசிய ரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில்,
1️⃣இணக்கப்பாடு
2️⃣வினைத்திறன்
3️⃣விளைதிறன்
4️⃣உள்வாங்கல்
5️⃣புத்துருவாக்கம்
ஆகிய பிரதான குறிகாட்டிகளின் கீழ் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான மதிப்பீட்டு முடிவுகளின் பிரகாரம், எமது சபையானது இணக்கப்பாடு (Compliance), வினைத்திறன் ( Efficiency ), விளைதிறன் (Effectiveness), புத்தாக்கம் (Innovation) ஆகிய நான்கு குறிகாட்டிகளில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினை கைப்பற்றி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டதுடன், ஆளுகை தொழிற்பாடுகள் (Governance Practices) எனும் செயல்திறன் பகுதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்றமைக்கான முதல் நிலை சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையானது பெருமைமிகு ஓர் தருணமாகும்.
⭐️அத்துடன் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணமானது அதிக விருதுகளைப் பெற்று (20 விருதுகள்) முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🤝எமது சபையானது தேசிய ரீதியில் இவ்விருதினை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பினை நல்கியிருந்தமை இந்நேரத்தில் குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.
🤝அந்த வகையில், எமது சபை இந்த கௌரவத்தை பெறுவதற்காக செயற்றிறன் மதிப்பீடு நடைபெறும் நேரத்தில் உத்தியோகத்தர்களை சிறப்புடன் வழிநடாத்தி, ஒன்றிணைத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்த முன்னாள் நகரசபை செயலாளர்கள் திரு.பூ.செந்தில்நாதன் மற்றும் திரு.இ.தயாபரன் அவர்களை நாம் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். இக்கௌரவத்தினை பெறுவதற்கான இவர்களின் பங்கு அளப்பரியது.
🤝மேலும், இவ்விருதினை பெற அயராது உழைத்த எமது சபையின் சகல உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் மற்றும் மதிப்பீட்டு நேரத்தில் சிறப்புடன் செயலாற்றி தற்போது இடமாற்றம் பெற்றுச்சென்றிருக்கும் உத்தியோகத்தர்கள் திருமதி. பானு துஸ்யந்தன், திருமதி.த.சோதிமலர் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
🤝அத்துடன், செயற்றிறன் மதிப்பீட்டு காலப்பகுதியில், உள்ளூராட்சி ஆணையாளராக கடமையாற்றி நேர்த்தியான முறையில் வழிகாட்டல்களை எமக்கு வழங்கி தற்சமயம் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றிருக்கும் திரு.செ.பிரணவநாதன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
🤝மேலும், இச்செயற்றிறன் மதிப்பீட்டுக்காக சிறப்பான முறையில் தமது ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிநடாத்தியிருந்த எமது பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.தெ.ரதீஸ்வரன் அவர்களுக்கும் எமது விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இவரது ஆலோசனைகள் நாம் இவ்விருதினை பெற பெரிதும் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். அத்துடன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தர் அவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
🤝அத்துடன், செயற்றிறன் மதிப்பீட்டுத் தருணத்தில் மொழிபெயர்ப்பு கடமையில் ஈடுபட்டு நாம் இவ்விருதினை பெற்றுக்கொள்வதற்கு பக்கபலமாக தோள்கொடுத்த எமது சகோதரமொழி உத்தியோகத்தர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
🤝 மேலும், நாம் இச்செயற்றின் மதிப்பீட்டு பணிகளில் அதிகளவிலான புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு பயிற்சிநெறிகளையும், தமது ஆலோசனைகளையும் வழங்கியிருந்த CDLG திட்ட குழுவினருக்கு எமது உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
🤝 அடுத்து, செயற்றிறன் மதிப்பீட்டு பணிகளுக்கு தேவையான தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை தக்க தருணத்தில் வழங்கி ஒத்துழைப்பு நல்கிய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பேருவகை கொள்கின்றோம்.
🤝 அத்துடன், எமது சபையின் அனைத்து செயற்பாடுகளிலும் பக்கபலமாக இருந்து எமது ஆக்கபூர்வமான பணிகளுக்கு தமது ஒத்துழைப்பினை நல்கிவரும் எமது அன்பான பொதுமக்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.
🤝 மேலும், இவ்விருது வழங்கும் விழாவில் எம்முடன் விருதுபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், இவ்வெள்ளி விருதினை நாம் பெற்றுக்கொள்ள எமக்கு பல வழிகளிலும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், ஒத்துழைப்புகளையும் வழங்கி எமக்கு துணைநின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
🙏மக்கள் சேவையில் மகிழ்ச்சி காண்போம் 🙏

வவுனியா நகர சபையின் வைரவபுளியங்குளம் நடமாடும் சேவை – 31.07.2024

வவுனியா நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே வருகை தந்து வழங்கும் நோக்கில் வைரவபுளியங்குளம் வட்டார மக்களுக்கான நடமாடும் சேவையானது நகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவையானது 31.07.2024 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் நகர சபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறிப்பாக இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், சேதனப் பசளை விற்பனை ( கிலோ – ரூ.25.00 ), கழிவகற்றும் சேவைகள் மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆதன வரியினை செலுத்தாதோர் ஆதன வரியினை முழுமையாக செலுத்தி கழிவுகளை பெற்றுக்கொள்வதுடன், எமது வட்டாரத்தின் அபிவிருத்திக்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
மேற்படி நடமாடும் சேவையுடன் இணைந்தவாறாக 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலும் முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளமையினால் வைரவபுளியங்குளம் வட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டு வட்டார அபிவிருத்திக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Translate »