2024 ஆம் ஆண்டின் வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவையானது மக்களுக்கு அறியத்தந்தமையின் பிரகாரம், திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் 29.02.2024 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை வவுனியா நகர சபையினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில் வவுனியா மாவட்டத்தின் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். குறித்த தினத்தில் நகர சபையினால் வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள் திருத்தம், வடிகாலமைப்பு சுத்திகரிப்பு வேலைகள், நீரிணைப்பு சேவைகள், கழிவற்றல் சேவைகள், சேதன பசளை விற்பனை, வியாபார உரிமம் வழங்குதல், முச்சக்கர வண்டி உரிமம் வழங்குதல், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள், ஆதன வரியினை செலுத்துதல், விளம்பர அனுமதிகள், கட்டட அனுமதி வழங்குதல், காணி உப பிரிவிடுகை, நகர சபை பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார ஆலோசனைகள், நகர சபைக்கு உரித்தான முறைப்பாடுகளுக்கான தீர்வு வழங்குதல் உள்ளடங்கலாக அனைத்து சேவைகளும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தினத்தில் வருகை தந்த பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, நகர சபையினால், நாக தம்பிரான் கோவில் வீதி மற்றும் ஐயனார் கோவில் வீதி திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், 30 வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டதற்கமைவாக, குறித்த தினத்திலேயே 28 வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டதுடன், 2 வீதி விளக்குகளை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சேவையின் போது 5 கழிவகற்றல் வாகனங்கள் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டதுடன், திண்ம கழிவகற்றல் தொடர்பில் 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று கழிவகற்றல் நடவடிக்கைகள் அன்றைய தினத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக நகர சபையால் தயாரிக்கப்பட்ட 280 கிலோ சேதன பசளையானது குறைந்த விலைக்கு (ரூ.25.00 ) பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும், பொது மக்களிடமிருந்து 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததுடன், 22 முறைப்பாடுகள் அன்றைய தினமே பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடி கள விஜயம் மேற்கொண்டு தீர்வு காணப்பட்டதுடன், 02 முறைப்பாடுகள் தற்போது அலுவலக பரிசீலனையிலுள்ளது. அத்துடன் குறித்த நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற 35 வியாபார உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், நூலக சேவையினை விரிவாக்கும் நோக்கில் 25 நூலக அங்கத்துவ விண்ணப்பங்கள் பரசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு நூலக அங்கத்துவ அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை நிறைவின் போது 110 இற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்து நகர சபையின் சேவைகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த பெரும்பான்மையான கோரிக்கைகள் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டது.
வவுனியா நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது நடமாடும் சேவையினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எம்முடன் கைகோர்த்து நின்ற மக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் ஏனைய வட்டாரங்களிலும் நடாத்தப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதுடன், நகர சபையின் சேவைகளை திறன்பட வழங்குவதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும், பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.