வவுனியா நகர் பகுதிகளில் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று 07.03.2024 ஆம் திகதி பி.ப 3.00 மணியளவில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நகரசபை செயலாளர் திரு. இராசையா தயாபரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வவுனியா பொலிஸ் திணைக்கள போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி , வவுனியா வர்த்தக சங்க தலைவர் திரு. எஸ்.சுஜன், வர்த்தக சங்க செயலாளர் திரு. ஆ.அம்பிகைபாகன் உட்பட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள், நகரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா நகர பகுதிகளில் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் , பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது .
01. பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, ஹொரவப்பொத்தான வீதி ஆகிய வீதிகளில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களின் வாகனங்களை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபை வாகன தரிப்பிடத்தில் நிறுத்த வர்த்தக சங்கம் நடவடிக்கை எடுத்தல்.
02.தர்மலிங்கம் வீதியின் பக்க எல்லைக்கோடுகளை நகரசபை அமைப்பதுடன், குறித்த எல்லைக்கோட்டுக்கு வெளியே தரித்துவிடப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து பொலிஸ் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தல்.
03.நகரசபையால் ஒரு வழிப்பாதையாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தைசுற்றுவட்ட வீதியில் ( சதோசா வீதி) போக்குவரத்துப் பொலிஸ் அலுவலர்களின் கண்காணிப்பை அதிகரித்தல் .
மேற்படி தீர்மானங்களை 15.03.2024 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.