தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 221 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 221 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
பண்டாரவன்னியன் இலங்கையின் மாபெரும் தேசிய வீரனும், அடங்காப்பற்றின் (வன்னி) தன்னிகரற்ற தமிழ் மாமன்னனுமாவார்.இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) கொண்டாடப்படுகிறது.
வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான தேசிய வீரன் மாவீரன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் நிகழ்வானது வவுனியா நகர சபை மற்றும் பண்டாரவன்னியன் விழா ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் 25.08.2024 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பீ.ஏ.சரத்சந்திர, முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.தெ.ரதீஸ்வரன், தமிழ்மணி அகளங்கன், மற்றும் பொது அமைப்புக்கள், பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் பற்றாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பண்டாரவன்னியனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. மாவீரன் பண்டாரவன்னியன் இம்மண்ணிலே மரணித்தாலும் ஒவ்வொரு தமிழர்களது மனங்களிலும் அவன் ஓர் வீரனாக வாழ்ந்து வருகின்றான் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. எனவே இந்நாளில் அவரைப் போற்றி நினைவுகூருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »